மின் பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஆக. 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நேற்று (ஆக. 23) அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வணிகவரி ஆணையர் மற்றும் வணிகவரி உயர் அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் திறம்படச் செயல்பட்டு வரி ஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்.
வரி ஏய்ப்புக்கு உள்ளாகும் பொருட்களாகக் கண்டறியப்படும் கட்டுமானத்துக்குரிய இரும்புக் கம்பிகள், சிமென்ட், மின்சாதனப் பொருட்கள் மற்றும் பிளைவுட் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் வணிகர்கள் மீது தனிக் கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆய்வின்போது உற்பத்தியாளரின் மின் பயன்பாட்டை அளவுகோலாகக் கொண்டு, வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கிறதா என விஞ்ஞானப்பூர்வமாகவும், சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் வகையிலும் ஆய்வு செய்து வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.