சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கார். 
தமிழகம்

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: 16 சொகுசு கார்கள், பணம் பறிமுதல்

செய்திப்பிரிவு

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினர் புதிதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஐபோன் மூலமாக பல ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதாக கூறி, டெல்லி தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுகேஷ் சந்திரசேகருக்கு வெளியில் இருந்து உதவிய இருவரை கைது செய்தனர்.

மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வக கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் டெல்லி அமலாக்கத் துறையை சேர்ந்த 16 பேர் கொண்ட அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 7 நாட்களாக இந்த சோதனை நடைபெற்றது. இதில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.70 கோடி மதிப்பிலான 16 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். ஒரு லேப்டாப் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டுக்கும் சீல் வைத்துள்ளனர். சிறையில் உள்ள சுகேஷ்சந்திரசேகரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT