சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 3,500 குடும்பங்கள் ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான வீடுகளில் மறு குடியமர்த்தப்பட்டன.
இங்குள்ள மக்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெற ஏதுவாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு வேலை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என டிசம்பர் 31-ம் தேதியிட்ட ‘தி இந்து’வில் செய்தி வெளியானது. இந்நிலையில் துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியில் நேற்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாமுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் 133 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக் கானோருக்கு வேலை கிடைத்தது.
பணி நியமன ஆணை வழங்கி அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டு லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.பழனிசாமி, தமிழக அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் குமார் ஜெயந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.