திமுக விளம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை நேரில் சென்று திறந்து வைக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
சென்னை கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சென்னை மாநகராட்சியும் தெற்கு ரயில்வேயும் இணைந்து மேம்பாலம் கட்டும் பணியை 2007-ல் தொடங்கின. வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு தற் போது மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த மேம் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் பிராட்வே - மணலி இடையே இயக்கப்படும் பஸ்கள், திரு வொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சுற்றி வரவேண் டிய அவசியம் இல்லை. திரு வொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் குறையும். கொருக்குப்பேட்டை மேம்பாலம், முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த மேம் பாலத்தை வரும் 28-ம் தேதி பொதுமக்கள் பயன்பாடுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் ‘முதல்வரை நேரில் பார்த்திருக்கீங்களா?’ என்ற விளம்பரம் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்யப் பட்டு வருகிறது. வழக்கமாக அனைத்து திட்டங்களையும் காணொளி காட்சி மூலமாக திறந்துவைக்கும் முதல்வர் ஜெயலலிதா, திமுக விளம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், சொந்த தொகுதி என்பதாலும் கொருக்குப்பேட்டை மேம் பாலத்தை நேரில் வந்து திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக முதல்வர் செல் லும் பாதைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விழா நடைபெற உள்ள பகுதியை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை காவல்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.