பெரியார் சிலை கல்வெட்டுகளில் உள்ள இறை மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்து தமிழர் பேரவை, பாரத் இந்து முன்னணி, ஆதி சிவ சோழர் புலிப்படை ஆகியவை இணைந்து பெரியார் சிலைகளில் உள்ள இறை மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் இந்து தமிழர் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.ஜே.கோபால் கூறியதாவது:
பெரியாரின் சிலைகளில் உள்ள கல்வெட்டுகளில் இருக்கக் கூடிய இறை மறுப்பு வாசகங்கள், அனைத்து மதத்தினரின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது. தமிழகம் பெரியார் மண் இல்லை. தமிழகம் ஆன்மிக பூமி. எனவே, பெரியாரின் இறை மறுப்பு வாசகங்களை அகற்ற வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை தமிழக அரசிடம் மனு அளித்தும் பலனில்லை. அதனால்தான் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டங்கள் வரவேற்கத்தக்கது. பெரியார் இறை மறுப்பாளர். அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அர்ச்சகராக பணியை ஏற்பவர்களால் எப்படி ஆகம விதிகளை பின்பற்றி பூஜைகளை செய்ய முடியும்.
இத்தகைய முறையை கொண்டு வந்து இந்து மதத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாக கருதுகிறோம். ஆகம விதிகளை நன்கு அறிந்து பயிற்சி பெற்ற, இறை நம்பிக்கை உள்ளவர்களைத்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.