திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் பள்ளி, சமுதாய கல்லூரி, கோசாலை, மருத்துவ மையம், முதியோர், மாணவ-மாணவியர் இல்லங்கள் உள்ளிட்டவை அடங்கிய தனியார் தொண்டு நிறுவன வளாகம் உள்ளது.
இந்த தொண்டு நிறுவன வளாக மாணவர் இல்லத்தில், சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (46) என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், தலைமை வார்டன் கிருஷ்ணசாமி தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவர் இல்ல வார்டனாக புதிதாக பணியில் சேர்ந்த ஒருவரிடம் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, தொண்டு நிறுவன நிர்வாகிகள் கடந்த 9-ம் தேதி மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், 2017-ம் ஆண்டு 5 மாணவர்களுக்கு கிருஷ்ணசாமி பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்ததால், அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தொண்டு நிறுவனம் சார்பில், ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அப்புகார் தொடர்பாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமார், ஏடிஎஸ்பி மீனாட்சி, டிஎஸ்பிக்கள் கல்பனா தத், சாரதி உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர் இல்லத்தில் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று முன்தினம் இரவு சென்னையில் கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.