வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளாக மூட்டு வலி, முதுகு வலி மற்றும் சிறுநீர்ப்பைத் தொற்று காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
இதற்கிடையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுநீர்ப்பை நோய் தொற்றுக்காக கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றார். மேலும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகிறார்.
இந்நிலையில், மூட்டு வலி மற்றும் முதுகு வலி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பேரறிவாளன் நேற்று காலை சென்றார். அவரை, வேலூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார், பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காலை 9.30 மணி முதல் பகல் 11.40 மணி வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர், மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.
இதுகுறித்து, போலீஸார் கூறும் போது, ‘‘முதுகு வலி மற்றும் மூட்டு வலிக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாள னுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டன’’ என்றனர்.