வாணியம்பாடி பேருந்து நிலை யத்தில் இளம்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட ஊர்க்காவல் படை வீரரை கைது செய்யக்கோரி சக பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி கோணாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன்(35). இவர், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சபரிநாதனும் போக்குவரத்தை சரி செய்தார்.
அப்போது, திருப்பத்தூர் செல் வதற்காக வாணியம்பாடியைச் சேர்ந்த 22 வயதுள்ள இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக அங்கு காத்திருந்தார். இந்நிலையில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சபரிநாதன் அந்த பெண்ணிடம் சென்று அவரது செல்போன் எண்ணை கேட்டு, தொந்தரவு செய்தார். அதை அங்குள்ள பயணிகள் கண்டு சபரிநாதனை கண்டித்தனர். உடனே, சபரிநாதன் அந்த இளம் பெண்ணிடம் தனது செல்போன் எண்ணை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அவரிடம் கொடுத்து திருப்பத்தூர் சென்ற உடன் தனக்கு போன் செய்ய வேண்டும் என மிரட்டியதாக கூறப் படுகிறது.
இதைக்கண்ட பயணிகள் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் சென்று முறையிட்டனர். இதை யறிந்த சபரிநாதன் அங்கிருந்து தப்பியோடினார். உடனே, பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் அநாகரீக செயலில் ஈடுபட்ட சபரிநாதனை கைது செய்ய வேண்டும் எனக்கூறி காவலர்களை முற்றுகையிட்டு திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சபரி நாதனை தேடி வருகின்றனர்.