கோடநாடு எஸ்டேட் மேலாளர் உட்பட மூவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சசிகலா உட்பட 5 பேரை சாட்சிகளாக விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கே.விஜயன் தெரிவித்தார்.
சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட 103 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர் கே.விஜயன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. சயானிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த விசாரணை அறிக்கையை வரும் 27-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியாக உள்ள எஸ்டேட் மேலாளர் நடராஜன், மின்வாரிய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணரை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சாமி ஆகியோரின் வழக்கறிஞரும், மக்கள் சட்ட மையத் தலைவருமான வழக்கறிஞர் கே.விஜயன் கூறியதாவது:
"கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான் மற்றும் வாளையாறு மனோஜைத் தவிர குற்றம் சாட்டப்பட்டுள்ள பிறர் வழக்குக்குத் தொடர்பில்லாதவர்கள். இந்த வழக்கில் 103 சாட்சிகள் சேர்க்கப்பட்ட நிலையில், வழக்கை முடிக்க வேண்டும் என, 41 சாட்சிகளை மட்டுமே விசாரித்தனர். அப்போதைய அதிமுக அரசு வழக்கை அவசரகதியில் முடிக்க முற்பட்டு, சாட்சியான சாந்தா என்ற பெண் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மாத காலத்தில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது. கரோனா காலத்தில் உலகிலேயே கோடநாடு வழக்கின் விசாரணை மட்டுமே நடந்தது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எட்பபாடி பழனிசாமி, சசிகலா, முன்னாள் மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், முன்னாள் எஸ்பி முரளிரம்பா, சஜீவன் ஆகியோரை சாட்சியாக விசாரிக்க எதிர்த் தரப்பு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மின்வாரிய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோல, சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட 103 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த வேண்டும்".
இவ்வாறு வழக்கறிஞர் கே.விஜயன் தெரிவித்தார்.