முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதற்றத்தில் பேசுவதாக, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஆக. 23) அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:
"தமிழறிஞர் பாவாணரின் பேத்தி பொது நூலகத்துறையில் ஒரு நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், அங்கு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய வயதையும் சூழலையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஒரு பணியிடத்தை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம்.
தமிழ் அறிஞர்களின் குடும்பம் எந்த நிலையிலும் வறுமைச் சூழலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மறைமலை அடிகளாரின் பேரன் கஷ்டப்படுகிறார் என அறிந்ததும், அவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டவர் முதல்வர்.
தமிழறிஞரின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதிலே முன்னின்று, அதற்கு காப்புரிமை வழங்குவதைக் கடமையாகக் கருதி நிறைவேற்றியவர் கருணாநிதி. இந்த அரசும் அத்தகைய பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோடநாடு விவகாரம் குறித்து அளித்த பேட்டி இருக்கிறது. இந்த விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்புவதே தவறு, விதிகளே இல்லை எனக் கூறுகிறார். ஆனால், அவரே சட்டப்பேரவையில் இதனை எழுப்புவது அவரின் உரிமை என்கிறார்.
சட்டப்பேரவைக்கு இதனைக் கொண்டுவந்ததே அதிமுகதானே. இப்போது அதனை விவாதிக்க முடியாது என்கின்றனர். நடந்தது சாதாரண சம்பவம் கிடையாது. கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தன் வாழ்நாளில் மனதுக்கு நெருக்கமாக ஜெயலலிதா நினைத்த இடம் அது. கோடநாடு இல்லத்தில் இருந்தே அரச காரியங்களைத் தன்னால் நடத்த முடியும் என, அந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இது அவசரமாக விவாதிக்கக்கூடிய விவகாரம் அல்ல என்கிறார் ஜெயக்குமார். அவருக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், அதிமுகவின் சாதாரணத் தொண்டர்கள், இன்றைக்கு என்ன மர்மம் நிகழ்ந்திருக்கிறது என அறிய எண்ணுகின்றனர். தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். நீதிமன்றம் அதனைப் பதிவு செய்துகொள்கிறது. அதனடிப்படையில், அரசு மேல் விசாரணை செய்கிறது. ஜெயக்குமார் சொல்வது வேடிக்கையானது. பதற்றத்தில் தான் சொன்னதையே மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.
சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் இருக்கும் முதல்வர் சட்டத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்பதை முன்னாள் சட்ட அமைச்சர் சொல்வது என்பது வேடிக்கையானது. இதில் பழிவாங்கும் நோக்கமோ, அரசியல் நோக்கமோ இல்லை. இது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை".
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.