கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி செலுத்தும் மையத்தை இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் | படம்:ஜெ.மனோகரன். 
தமிழகம்

24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி: கோவை அரசு மருத்துவமனையில் மையம் தொடக்கம்

க.சக்திவேல்

கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஆக.23) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து செயல்படுத்தவும், அனைத்துத் தரப்பினருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏதுவாகவும் முதல்வரின் உத்தரவுப்படி கோவை அரசு மருத்துவமனையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரம் தடுப்பூசி செலுத்தும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர், கோலார்பட்டி, சுண்டக்காமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

இந்த மையங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உள்ளநோயாளிகள், புறநோயாளிகள், நோயாளிகளின் உடன் இருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்படும்''.

இவ்வாறு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

அப்போது , கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் அருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

.

SCROLL FOR NEXT