சத்தியவாணன் | கோப்புப் படம். 
தமிழகம்

தஞ்சாவூரில் காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் மர்ம மரணம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே உள்ள சீதா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சாமிநாதன் வீட்டில் பத்து நாட்களுக்கு முன்பு 6 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் திருட்டுப் போயின.

இதுகுறித்து, தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள தாண்டவன்குளம் முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணன் (32), தஞ்சாவூர் பூக்காரத் தெருவைச் சேர்ந்த சூர்யா (29), சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீத் (41) ஆகியோரைக் காவல் துறையினர் ஆகஸ்ட் 12-ம் தேதி பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களில் சத்தியவாணன் இன்று (ஆக. 23) அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா காந்தபுனேனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT