ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமி 
தமிழகம்

மதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானத்துக்கு இன்று பட்டம் சூட்டும் விழா: 293-வது ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்கிறார்

செய்திப்பிரிவு

மதுரை ஆதீனத்தின் புதிய சன்னிதானமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு இன்று பட்டம் சூட்டப்படுகிறது.

தமிழகத்தில் மிகப் பழமையான சைவத் திருமடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின் 292-வது குரு மகா சன்னிதானமாக சீர்காழியைச் சேர்ந்த அருணகிரிநாதர் 1980-ல் பொறுப்பேற்றார். இவர் உடல்நலக் குறைவால் 10நாட்களுக்கு முன்பு முக்தியடைந்தார். இவரது உடல் மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே ஆதீன மடத்துக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அருணகிரிநாதர் உயிருடன் இருந்தபோதே இளைய ஆதீனமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் ஆதீன மடத்தில் தினமும் பூஜை உள்ளிட்ட வழக்கமான பணிகளை கவனிக்கிறார். அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை, ஆதீனத்துக்குரிய நகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் முறையாக அவருக்கு பட்டம் சூட்டப்படவில்லை.

இந்நிலையில் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் இன்று (ஆக.23) காலை 11 மணிக்கு மேல் அவர் 293-வது மதுரை ஆதீனமாக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார். முன்னதாக மறைந்த ஆதீனம் அருணகிரிநாதருக்கு குரு பூஜை மற்றும் சிறப்புப் பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்கள், முக்கிய நபர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புதிய ஆதீனம் ஆசி வழங்குவார் என ஆதீன மடத்தின் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980-க்குப் பிறகு நடக்கும் இந்தபட்டம் சூட்டும் விழாவை முன்னிட்டு புதிய ஆதீனத்தை சிறப்புப் பல்லக்கில் அமர வைத்து, ஆதீன வளாகத்தை ஊர்வலமாக சுற்றும் நிகழ்வு நடக்கிறது. மேலும், மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் ஆதீன வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT