சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை என்றால் நான் போட்டியிடத் தயார் என்று மத்திய தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
வலுவான கூட்டணி அமையாததால் இந்த முறை சிவகங்கை தொகுதியில் தனக்குப் பதிலாக மாற்று வேட்பாளரை நிறுத்தத் திட்டமிடுகிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன் ஆதரவாளர்கள், ‘‘1999-ல் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன், தமாக வேட்பாளரான ப.சிதம்பரத்தை வீழ்த்தி எம்.பி. ஆனார். ஆனால், 2004 தேர்தலில் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சிதம்பரத்துக்கு சிவகங்கை தொகுதியை விட்டுத் தர வேண்டும் என சோனியா கேட்டபோது, மறுக்காமல் விட்டுக் கொடுத்தார் நாச்சியப்பன்.
அதற்கு பிரதிபலனாக அவரைத் தொடர்ந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி. ஆக்கிய சோனியா, அண்மையில் அமைச்சரவையிலும் இடமளித்தார்.
2016 மே மாதம் வரை நாச்சியப்பனின் ராஜ்யசபா பதவிக் காலம் இருக்கிறது. இந்நிலையில், தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் சிதம்பரம், வாசன், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனர்.
தற்போது மியான்மர் சென்றிருக்கும் நாச்சியப்பன் 15-ம் தேதி டெல்லியில் சோனியாவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசவிருக்கிறார்’’ என்று கூறினர்.
சுதர்சன நாச்சியப்பனைத் தொடர்பு கொண்டபோது, “வெற்றி, தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை. சிவகங்கை தொகுதியில் சிதம்பரம் போட்டியிடுவதாக இருந்தால் அதை வரவேற்று வழிவிடுவோம். அதில்லாமல், மாற்று
வேட்பாளரை நிறுத்துவதாக இருந்தால் எனக்கு அந்த வாய்ப்பை எனக்குத் தாருங்கள். ஒருவேளை என்னுடைய ராஜ்ய சபா உறுப்பினர் பதவி முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருப்பதாக தலைமை கருதினால் எனக்கு பதிலாக எனது மகனுக்கு வாய்ப்பு தாருங்கள். கண்டிப்பாக சிவகங்கை தொகுதியில் வெற்றியோடு திரும்புவேன் என்று சோனியா காந்தியிடம் கேட்கப் போகிறேன்’’ என்றார்.