தமிழகம்

54-வது தேசிய புத்தகக் காட்சி தாம்பரத்தில் தொடக்கம்

செய்திப்பிரிவு

மேற்கு தாம்பரம் முழுநேர கிளை நூலகமும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து 54-வது தேசிய புத்தகக் காட்சி தாம்பரத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்.

புதிய அறிவிப்பு

நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராஜா பேசும்போது, ``தாம்பரத்தில் முக்கிய பகுதியில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இது பொதுமக்களுக்கு நல்ல வரப்பிரசாதமாகும். தாம்பரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. (தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வர உள்ளதாக என எம்எல்ஏ சூசகமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது) தாம்பரத்தில் 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் 9 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நீதிபதி மூ.புகழேந்தி, செங்கல்பட்டு மாவட்ட நூலக அலுவலர் கே.மந்திரம், தாம்பரம் காவல் துறை உதவி ஆணையர் எஸ்.ஏ.சீனிவாசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் இரா.லட்சுமணன், தாம்பரம் நூலகர் ஆர்.பி.வெங்கடேசன், வாசகர் வட்ட தலைவர் மூர்த்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூத்த மண்டல மேலாளர் எஸ்.மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகக் காட்சி வரும் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT