மோனிஷ் 
தமிழகம்

தடுப்பூசி போடாமல் நாட்டு மருந்து கொடுத்துள்ளனர்; வெறிநாய் கடித்ததில் ரேபீஸ் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பூந்தமல்லி நசரத்பேட்டையை அடுத்த அகரமேல் பகுதியில் கடந்த மாதம் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் அந்த வழியாக சென்ற 5 சிறுவர்களை கடித்துள்ளது. இதில், 4 சிறுவர்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ் நோய்) தாக்காமல் இருக்க அவர்களின் பெற்றோர் தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 7 வயது மகன் மோனிஷின் முகம் உள்ளிட்ட பல இடங்களில் நாய் கடித்திருந்தும் தடுப்பூசி போடாமல் நாட்டு மருந்து கொடுத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு பிறகு, சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவனுக்கு ரேபீஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து, சிறுவனின் உடலை மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.

இதுதொடர்பாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசியிடம் கேட்டபோது, ‘‘வெறிநோய் கடித்ததும் சிறுவனுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடாமல் நாட்டு மருந்தை கொடுத்துள்ளனர். அதனால்தான் சிறுவனுக்கு ரேபீஸ் நோய் வந்துள்ளது.

ரேபீஸ் நோய் வந்தால் கத்துவார்கள். அதிகமாக கோபம் வரும். பின்னர், நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படும். அதுபோல்தான் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், நாய் கடித்ததும், முதலில் கடிப்பட்ட இடத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பின்னர், ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT