புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு பகுதி. 
தமிழகம்

கடந்த 21 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆயிரம் வவ்வால்களுடன் வாழும் குடும்பம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கடந்த 21 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்களுடன் ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சூழலியல் அடிப்படையில் முக்கிய இனமான வவ்வாலை மனிதர்கள் பாது காக்க வேண்டியது அவசியம் என்று அவர் கள் கருதுகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபு பொன்முடி. வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவர் இயற்கை ஆர்வலர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு லாஸ்பேட்டையில் தனது வீட்டை கட்டினார். அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான வவ்வால்களுக்கும் இடம் அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

கடந்த 2000-ம் ஆண்டில் வீட்டின் கட்டுமான பணி நடந்தது. அப்போது வீட்டின்முதல் தளத்தில் நீச்சல்குளம் அமைத்தோம். நீச்சல் குளத்தின் தன்மையை அறியஅதைச் சுற்றி சிறு காலியிடம் விடப்பட்டது.நீர் கசிவு உள்ளதா என்பதை ஆராய அந்த அறை பராமரிக்காமல் விடப்பட்டது. அங்கு வவ்வால்கள் குடிபெயரத் தொடங்கின. அந்த வவ்வால்கள் எண்ணிக்கை படிப்படி யாக அதிகரிக்கத் தெடாங்கியது. தற்போது ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. குறிப்பாக இங்கு பூச்சி திண்ணி வவ்வால்கள் ('Dusky Leaf-nosed Bats') உள்ளன. வவ்வால்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து வெளியே சென்று வர சிறு இடைவெளி உள்ளது. இரவு நேரத்தில் வெளியே சென்று பகலில் வந்து தங்கும். வவ்வால்களால் எங்களுக்கு எந்த இடையூறும் இருந்ததில்லை. சில சமயம் வீட்டுக்குள் வந்தாலும் அவ்விடத்துக்கு சென்றுவிடும். வவ்வால் தங்கும் பகுதிக்கு நாங்கள் செல்ல சிறு கதவு பகுதி உண்டு. சிலசமயம் கதவை திறந்து பார்ப்போம்.

சூழலியல் ரீதியில் வவ்வால்கள் முக்கிய இனம். ஆனால் வவ்வால்கள் பற்றி பலரும் தவறாக கருதுகின்றனர். பழையகோயில்களுக்கு சென்றால் வவ்வால்களை பார்க்கலாம். வவ்வால்களால் கொசு, பூச்சித்தொல்லை ஏதுமில்லை.

இதனால் வீட்டைச்சுற்றி செடிகள் நன்கு வளர்கின்றன. வவ்வால் எச்சத்தை உரமாக பயன்படுத்துகிறோம். எங்கள் வீட்டில் வவ்வால்கள், தொடங்கி பறவைகள் வரை அனைவருக்கும் இடமுண்டு. வீட்டில் இவை அருந்த தனியாக தண்ணீர் வைக்கிறோம். நம்மைப்போல் அனைத்து உயிரினங்களும் இப்பூமியில் வாழ உரிமையுண்டு. வவ்வால் கள் குட்டிகளுடன் குடும்பமாக பாலூட்டி வளர்ப்பதையும் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

இதுதொடர்பாக பறவைகள் ஆர்வலர் விமல்ராஜிடம் கேட்டதற்கு, “நம் பண்டைய காலத்திலிருந்து வவ்வால்களை தவறாக குறிப்பிட்டதில்லை. வெளிநாடுகளில் வவ் வால்களை தவறாக சித்தரித்து பயத்தை பரப்பிவிட்டனர். தற்போது வவ்வால்கள் நோய்களை பரப்புவதாக தவறான வதந் தியும் பரப்பப்படுகிறது.

உண்மையில் வவ்வால்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை. விவசாயிகளின் நண்பன் வவ்வால். பூச்சிகளை கட்டுப்படுத் துவதில் வவ்வாலுக்கு அதிக பங்குண்டு. பறவைகளில் பாலூட்டுவது வவ்வால் மட்டும் தான். இரவில் பறந்து சென்று பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தும். முக்கியமாக கொசுக்களை கட்டுப்படுத்துவதில் வவ் வாலுக்கு அதிக பங்குண்டு. அதிக அதிர்வெண் ஒளி அலையை வவ்வால் எழுப்புவதால் பூச்சிகள் அவை இருக்கும் பகுதிக்கே வராது. காடுகள் உருவாக் கத்திலும் வவ்வாலுக்கு அதிக பங்குண்டு. வவ்வால்கள் ஆண்டுக்கு ஒரு குட்டியை மட்டும் ஈன்று வளர்க்கும் தன்மையுடையது என்பதன் மூலமே அதன் முக்கியத்துவம் புரியும்” என்று குறிப்பிடுகிறார்.

SCROLL FOR NEXT