காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன காப்பாளர் ரிட்டோ சிரியாக் தலைமையிலான வனத் துறை காவலர்கள் திருப்பருத்திக் குன்றம் பகுதியில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தனியார் கோழிப் பண்ணை அருகே பொது கால் வாயில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அப்பகுதியில் பள்ளம் தோண்டிய வனத்துறையினர், பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 5 முதல் 6 அடி வரையிலான 47 செம்மரக் கட்டை களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனச்சரகர் சிவ பெருமான் கூறியதாவது: வனச் சரகர்கள் 3 குழுக்களாக பிரிந்து திருப்பருத்திக்குன்றம் பகுதியில் சோதனை மேற்கொண்டோம். பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அருகே உள்ள கால்வாயில், செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தோம். அப்பகுதியின் பல்வேறு இடங்களிலும் வனத்துறை யினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரக்கட்டைகள் கால்வாய் தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்டதால் எப்போது வெட்டப்பட்டது என்பது தெரிய வில்லை. தமிழக வனப்பகுதியில் காணப்படும் செம்மரக்கட்டை வகை யை சேர்ந்தவையாக உள்ளன. காப்புக் காடு பகுதியில் வெட்டப் பட்டதா என விசாரித்து வருகிறோம். பிடிபட்ட செம்மரக்கட்டைகள் சுமார் 2 டன் இருக்கும். இவற்றின் சந்தை விலை ரூ.8 லட்சம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.