திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரிதாரிமங்கலம் கிராமத்தில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய தவ்வை சிற்பம் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “செங்கம் அடுத்த அரிதாரிமங்கலம் ஏரிக் கரையின் வடக்கு பகுதியில் 3 அடி உயரமும், 3 அடி நீளமும் உள்ள தவ்வை, மூத்ததேவி சிற்பம் இருந்தது. இதனை, கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் ஆய்வு செய்தார்.
அவரது ஆய்வில், நீர் ஆதா ரங்களை தெய்வங்களாக வணங் குவதும், அவற்றை தெய்வங்கள் பாதுகாப்பதாகவும் மக்களிடையே நம்பிக்கை உள்ளது. ஏரிமடைகளை கருப்பு காப்பதாக மடை கருப்பு தெய்வங்கள் பல இடங்களில் உள்ளன. அதுபோன்ற சிற்பமும், அதனுடன் சேர்ந்த கல்வெட்டும் அரி தாரிமங்கலத்தில் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டில் ஏரியில் இருந்து வயல்களுக்கு நீர் பாய உதவும் தூம்பிணையும், கேட்டையாரையும் திருவண்ணா மலையைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்து கொடுத்துள்ளார் என்பது செய்தியாகும்.
தவ்வைக்கு பிங்கல நிகண்டு கழுதையூர்தி, காக்கைக் கொடி யாள், முகடி, தௌவை, கலதி, மூதேவி, சீர்கேடி, கேட்டை, கெடலணங்கு, ஏகவேணி, சேட்டை ஆகிய 11 பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில், கேட்டை என்ற பெயர், கல்வெட்டில் திருக்கேட்டையார் என குறிக்கப்பட் டுள்ளது. பொதுவாக, துர்க்கை, கொற்றவை சிற்பங்களில் அவற்றை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு கிடைத்துள்ளன. நாங்கள் அறிந்தவரை முதல் முறையாக தவ்வை சிற்பத்தை செய்து கொடுத்த செய்தி கிடைத்துள்ளது சிறப்பாகும்.
மேலும், தவ்வை சிற்ப அமைதியும் வேறுபட்டுள்ளது. பொதுவாக, கால்களை பரப்பித் தொங்கவிட்டு பெருத்த வயிறுடன் தவ்வை காட்டப்படுவாள். ஆனால், இந்த சிற்பத்தில் சுகாசனத்தில் அழகிய உருவமாக காட்டப்பட்டுள்ளாள். அவளுடைய மகனாக கருதப்படும் மாந்தன், மாட்டு முகத்துடன் வலதுபுறம் காட்டப்படுவது மரபு. இங்கு இடதுபுறம் காட்டப்பட்டுள்ளான்.
மேலும், மகள் மாந்தி வலதுபுறம் காட்டப்பட்டுள்ளாள். அவளது காக்கைக் கொடி தெளிவாக இடது தோள்புறம் காட்டப்பட்டுள்ளது. மாந்தன், மாந்தி, தவ்வை ஆகிய மூவரும் அபய வரம் காட்டி அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்க தாகும். தூம்பையும், தவ்வையும் செய்தளித்த செய்தி ஒரு சேர காணப்படுவதால், அவள் ஏரியின் காவல் தெய்வம் என்பது உறுதியாகிறது. மன்னர் பெயர் இல்லாததால், கல்வெட்டின் காலம் எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டை சேர்ந்தது” என தெரிவித்துள்ளார்.