அதிமுக ஆட்சியில் தனியார் மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் இன்று (ஆக.22) ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சி தலைவர்கள் பாராட்டப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. ஒருவேளை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தவதற்கு தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தனியார் மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும் மானியக்கோரிக்கையில் நிதி நிலைமைக்கு ஏற்ப மருத்துவமனைகள் சீரமைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
எலி விஷமருந்தை சாப்பிட்டு அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதை தடுப்பதற்காக, அத்தகைய மருந்தை விற்பதற்கு தடை செய்வது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டையில் காலியாக உள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டிடங்களின் சீரமைப்பு பணி முடிவுற்றதும் அரசு மருத்துவமனை திறக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்ததுமே நீட் தேர்வு குறித்த அறிவிப்பும் வந்துவிட்டது. ஆகையால், நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். திமுக ஆட்சியில்தான் சென்னை வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.