தமிழகம்

மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்: திமுக அறிவிப்பு

செய்திப்பிரிவு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ.முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தத் தேர்தல், செப்டம்பர் 13ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1ஆம் தேதி (புதன்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கானக் கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, திமுக வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவின் இணைச் செயலாளராக உள்ளார்.

திமுக சட்டப்பேரவையில் போதிய பலத்தோடு உள்ளதால், எம்.எம்.அப்துல்லா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்துக்கு 18 உறுப்பினர் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT