தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும், நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இந்துக்கள் தை, ஆடி அமாவாசைகளில் நிறைவேற்றுவர்.
தை மாத அமாவாசையான நேற்று திருவோணம் நட்சத்திரத் துடன் அமைந்ததால் அது மஹோதய புண்ணிய நாளாகும். 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றக்கூடிய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம் நேற்று தோன்றியதால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.
இதனால் ராமநாத சுவாமி கோயில் நடை நேற்று அதி காலையே திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், ராமர், பிள்ளையார், முருகன் ஆகியோர் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப் புப் பூஜைகள் செய்து, அக்னி தீர்த்தக் கடலிலும், அதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் உள்ள கடலில் நீராடுவதற்கும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.