விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ம.ரவிச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் விநாயகர் சிலை வைத்து வழிபடபல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால், இந்துக்களின் மனம் புண்படுகிறது.
கரோனா பேரிடர் காரணமாக, கடந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு அரசு கூறும் கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து விழாவை கொண்டாட தயாராக உள்ளோம். இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா பேரிடரில் இருந்து மீண்டு, அனைவரும் சுகமான, அமைதியான, இன்பமயமான வாழ்க்கை நடத்த அருள்புரிய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்த உள்ளோம்.
அர்ச்சகர் நியமனம்
அரசு அனுமதிக்கும் நாட்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எனவே, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதாக கூறி, திராவிட கலாச்சாரத்தை திணிக்க தமிழக அரசு நினைக்கிறது. இதுதேவையற்ற வேலை. அர்ச்சகர்பணி என்பது சிலை அலங்கார வேலை அல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை சிவசேனா எதிர்க்கவில்லை. ஆனால், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி மட்டும் போதாது, அனுபவமும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.