தமிழகம்

சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கு அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் அவலநிலைதான் முக்கிய காரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னையில் ஒரு நாள் மழைக்கு சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதற்கு, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் அவலநிலை தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட வளர்ச்சி குறித்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், முன்னாள்மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், மத்திய அரசு சார்பில் சென்னை மாநகர வளர்ச்சிக்காக தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. அதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

பின்னர் எம்பி தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டத்தில், இதுவரை மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக போய் சேர்ந்து இருக்கிறதா, திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது. சென்னையில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதற்கு, கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் அவல நிலை தான் காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்று புதிய அரசு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேசும்போது, “சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புகளை ஏற்படுத்தும் பணி தற்போது ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.14 கோடியில் மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அக்டோபர் 15-ம் தேதிக்கு முன்னதாக முடிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ்குமார், சென்னை ஆட்சியர் ஜெ.விஜயா ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

          
SCROLL FOR NEXT