கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான கிணற்றில் இறந்து கிடந்த விவகாரத்தில் மாணவி சரண்யாவின் உடல் மறுபிரேத பரிசோதனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி அருகே உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த மோனிஷாவின் உடல் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஏற்கெனவே மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த மாணவி சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ஏழுமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர் குழுவினர் செய்யூரில், சரண்யா உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு நேற்று சென்றனர். அப்போது செய்யூர் வட்டாட்சியர் செல்வராஜ், சரண்யாவின் தந்தை ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர். அங்கு உடலைத் தோண்டி எடுத்து, மறுபிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் குழுவினர், சரண்யாவின் உடலை பரிசோதனை செய்தனர்.
காங்கிரஸ் மகளிரணியின் தேசிய பொதுச் செயலர் நக்மா, மாநிலத் தலைவி ஜான்சிராணி ஆகியோர் செய்யூரில் மறுபிரேத பரிசோதனை செய்யுமிடத்துக்குச் சென்று, மகளை இழந்த ஏழுமலைக்கு ஆறுதல் கூறினர்.