தமிழகம்

ஒரே இடத்தில் கூடிய 6 தலைமுறை வாரிசுகள்

குள.சண்முகசுந்தரம்

செட்டிநாட்டுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளத்தூரில் மே 25-ல் ஓர் அபூர்வ விழா!

பள்ளத்தூர் கரு.சிவ.காசிநாதன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி தம்பதிக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள் என ஒன்பது வாரிசுகள். இவர்களின் நேரடி வாரிசுகள்தான் இந்த விழாவை எடுத்துள்ளனர்.

தங்களது படைப்பு வீட்டை விழாக்களமாக மாற்றி இருந்தனர். அங்கே காசிநாதன் செட்டியார் - விசாலாட்சி ஆச்சி திருவுருவப் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு வாழ்த்துப்பா பாடினர். இந்தக் குடும்பத்து வாரிசுகள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பது இதுதான் முதல்முறை என்பதால் நெகிழ்ச்சியாகவே விழா நகர்ந்தது.

விழாவில் பேசிய அத்தனை பேரும் தனித் தமிழில் பேசினர். விழாவுக்கு வரமுடியாதவர்கள் ’ஸ்கைப்’ வழியாக விழாவுடன் இணைந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஒன்பது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

மதியம் நகரச்சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம். அதுமுடிந்ததும் கோயில் குளத்தின் படிக்கட்டில் அனைவரும் சேர்ந்து நின்று க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், பரதநாட்டியம் என படைப்பு வீடு கலகலப்பானது. இதில் முக்கியமாக குறிபார்த்து எறிதல் போட்டியைச் சொல்லியாக வேண்டும். ஒரு வாளியில் காய், கனிகள் பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டிருப்பார்கள். பத்தடி தூரத்தில் கணவன் முதுகு இல்லா நாற்காலியில் அமர்ந்திருப்பார். அவரது மனைவி எடுக்கும் சீட்டில் என்ன காய் வருகிறதோ அந்தக் காயால் கணவரின் முதுகில் குறிபார்த்து எறிய வேண்டும் - இதுதான் போட்டி.

இந்த விழாவில் 60 வயதைக் கடந்தவர்கள் 72 பேர் கலந்து கொண்டனர். இவர்களை மேடைக்கு அழைத்து கவுரவித் தவர்கள், இன்னொரு சிறப் பையும் செய்தனர். படிப்பில் சிறப்பிடம் பிடித்த பத்தொன்பது செல்லங்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கப்படுத்தினர்.

எட்டரை மணி நேரம் நடந்த இந்த விழா இரவு சிற்றுண்டியுடன் நிறைவை நெருங்கியபோது ’அடுத்து எப்போது கூடுவோம்’ என்ற ஏக்கம் எல்லோர் மனத் தையும் ஆக்கிரமித்திருந்தது.

விழா குறித்து நம்மிடம் பேசிய காசிநாதன் செட்டியாரின் பேரன் சொக்கலிங்கம், ’’சுதந்திரப் போராட்ட தியாகியான எங்கள் ஐயா 40 வருடங்களுக்கு முன்பு 97 வயதில் சிவலோக பதவி அடைந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அனைவரும் ஒன்றுகூடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இனி, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இப்படி விழா எடுப்பது என தீர்மானித்திருக்கிறோம். உறவு முறைகளையும் மரபு வழி பழக்க வழக்கங்களையும் வாரிசுகளுக்கு சொல்லிக் கொடுக்கும் இந்த விழாவை எல்லாக் குடும்பங் களுமே கொண்டாட வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT