திருப்பத்தூர் அருகே கொண்ட நாயக் கன்பட்டி கிராமத்தில் நில பிரச்சினை தொடர்பாக மருமகன் குடும்பத்தை கொலை செய்ய வீட்டுக்கு வெடி வைத்த வழக்கில் மாமனார் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (60). விவசாயி. இவருக்கு மங்கை, வளர்மதி என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மங்கைக்கு நந்தினி (30), யுவராஜ் (28), கார்த்திக் (24) என்ற பிள்ளைகளும், இரண்டாவது மனைவி வளர்மதிக்கு அனிதா (27), அகிலா (24), அஜித் (23) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
இதில், இரண்டாவது மனைவி யின் மகள் அனிதா என்பவரை அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் (30) என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆனால், மாமனார் ராஜாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக நரசிம்மன் அவரிடம் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராஜா தனக்கு சொந்த மான நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி நபர்களுக்கு விற்றுள்ளார். அந்த நிலம் 2, 3 பேரிடம் கைமாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிலத்தை நரசிம்மன் வாங்கியுள்ளார். இதற்கு, ராஜாவும் அவரது முதல் மனைவி மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதிக்கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளனர். ஆனால், நரசிம்மன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த ராஜாவும் அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோர் நரசிம்மன் குடும் பத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக, ஜெலட்டின் (ஸ்லரி), டெட்டனேட்டர், 500 மீட்டருக்கு மின் வயரை வாங்கி யுள்ளனர். திருப் பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்த நிலையில் ஜெலட்டின் வெடி வைத்து வீட்டை தகர்த்து அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, நரசிம்மன் வீட்டுக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்ற யுவராஜ், கார்த்திக் ஆகியோர் 20 ஜெலட்டினை ஒன்றாக கட்டி வீட்டின் சமையல் அறையின் புகை வெளியேறும் ஃபேன் உள்ள இடத்தில் வைத்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் உள்ள வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்த நரசிம்மனின் தந்தை சேட்டுவுக்கு ஆட்கள் நடமாட்டம் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்துள்ளார். இதை கவனித்த யுவராஜ், கார்த்திக் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
அதிர்ச்சியில் சேட்டு கூச்சலிடவே உறக்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து வந்து பார்த்தபோது, ஜெலட்டினை சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு மின் வயர் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைப்பு கொடுத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மின் வயரை துண்டித்தவர்கள் கந்திலி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்தது தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
நரசிம்மன் கொடுத்த புகாரின்பேரில் ராஜா, யுவராஜ், கார்த்திக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம், ஜெலட்டின், டெட்டனேட் டர்களை யாரிடமிருந்து வாங்கினார்கள் என காவல் துறையினருடன் ‘க்யூ’ பிரிவு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த சம்பவத்தில் மின் இணைப்பை தவறாக கொடுத்துள்ளனர். அதை மாற்றி மின் இணைப்பு கொடுத்தாலும் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் வெடித்திருந்தால் பெரிய அளவுக்கு பாதிப்பு அல்லது உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
ஜெலட்டினை அந்த வீட்டின் கட்டுமானப் பகுதியில் மண்ணில் புதைத்து வெடிக்க வைத்திருந்தால் அதன் பாதிப்பு அதிகமாகவும் முற்றிலும் வீடும் சேதமடைந்து உயிரிழப்பும் ஏற்பட் டிருக்கும். அதிர்ஷ்டவசமாக உறக்கத்தில் இருந்த சேட்டு விழித்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.
இதற்கிடையில், நரசிம்மன் வீட்டை தகர்க்க பயன்படுத்தப்பட்ட ஜெலட்டின், டெட்டனேட்டரை வழங்கியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் விஜயகுமார் (28), முனுசாமி (26) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.