மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் கனிவாகப் பேசி போக்குவரத்தைச் சீரமைக்கும் எஸ்.ஐ.யின் செயலைத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் பாராட்டினர்.
மதுரை மாநகரக் காவல்துறையின் மதிச்சியம் போக்குவரத்துப் பிரிவு எஸ்.ஐ. பழனியாண்டி. இவர் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம், பழ மார்க்கெட் சந்திப்பு, மேலமடை, சுகுணா ஸ்டோர், ஆவின் நிலையம் உள்ளிட்ட சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் கனிவாகப் பேசி போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படிப் பணியிலிருக்கும்போது அவர் பேசியதை, சென்னை மருத்துவர் ஒருவர் மதுரைக்கு வந்தபோது பார்த்தார். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
அதனைப் பார்த்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, போக்குவரத்து எஸ்.ஐ. பழனியாண்டியை அலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார். அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இன்று எஸ்.ஐ.யை வரவழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். அப்போது போக்குவரத்துத் துணை ஆணையர் ஈஸ்வரன், தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து எஸ்.ஐ. பழனியாண்டி கூறும்போது, ''சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் பரபரப்பான மனநிலையில் இருப்பார்கள். அவர்களது மனதை சாந்தப்படுத்தும் வகையில் சிக்னல்களில் இருக்கும் மைக்கில் மனத்திற்கு ஆறுதலாகக் கடந்த 2 ஆண்டுகளாகப் பேசிவருகிறேன். அப்படிப் பேசும்போது, ‘ரோடுன்னா டிராஃபிக் இருக்கும், மனுஷன்னா சிக்கல் இருக்கும், குடும்பம்னா சண்டை இருக்கும், எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகணும், விட்டுக்கொடுத்துப் போகணும், அதுதான் வாழ்க்கை.
சிரமம், சிக்கல் இல்லைன்னா வாழ்க்கையில்லை, எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது. ஒவ்வொரு வண்டியா பொறுமையா வாங்க. விட்டுக்கொடுத்து வாழுங்க. பொறுமையா வாங்க, வாழ்க்கை அருமையாக இருக்கும். வசதியோடு வாழணும்னா அசதி வரும் வரை உழைக்கணும்’. இப்படி அறிஞர்கள் சொன்ன வாசகங்களை எடுத்துச் சொல்வேன்.
இது பலருக்கும் பிடித்துப் போய் பலரும் டிராஃபிக் சிக்னல்களைக் கடைப்பிடித்துச் செல்கின்றனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். அதனைத் தொடர்ந்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சால்வை அணிவித்துப் பாராட்டி, புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். இப்படிப் பேசுவதற்காகவே நிறையப் புத்தகங்கள் படிப்பேன். நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையில் பேசுவேன். இதன் மூலம் மக்களின் நண்பனாகக் காவல்துறை திகழ்கிறது'' என்று தெரிவித்தார்.