பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்தது.
தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவு, முதலமைச்சர் தனிப் பிரிவு, சென்னை மத்திய குற்றப் பிரிவு ஆகியவற்றில் புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், யூடியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், அவதூறாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில், தலைமறைவாகி இருந்த மதன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதனால் மதன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவருடன் யூடியூப் நடத்திய பங்குதாரரான அவரது மனைவியை போலீஸார் கைது செய்தனர். மதனைத் தேடி வந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி தருமபுரியில் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஜூலை 6ஆம் தேதி அன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில், பப்ஜி மதன் ஆஜரானார். அப்போது, குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் அளவுக்கு தான் எவ்விதத் தவறும் செய்யவில்லை எனவும், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பப்ஜி மதன் வாதாடினார்.
இந்நிலையில், பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் இன்று (ஆக. 21) உறுதி செய்தது.