ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் (ஆக.21) வெளியிட்ட அறிக்கை:
"ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
124 மைல் நீளமுள்ள இந்த வாய்க்கால் கரையில் சுமார் 55-வது கிலோ மீட்டரில் பெருந்துறை, கண்ணவேலம்பாளையம் கிராமத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு மண் கரைகள் வலுவிழந்தது நேற்று முன்தினம் மாலை கசிவு ஏற்பட்டு, அதன் வழியாக தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
பலவீனமான மண் கரைகளைக் கண்டறிந்து, அதன் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஒப்பந்ததாரர்கள் பணி நடைபெற மேலும் ஒரு வார காலம் அவகாசம் கூறியிருந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15-ம் தேதி முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், மலைப்பாளையம், கரையக்காடு, கண்ணவேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு ஆகிய 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்தக் கரை உடைப்புக்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலின் இருபுறத்தில் உள்ள கரைகளை ஆய்வு செய்து மண் சரிந்துள்ள இடங்களில் கரையைப் பலப்படுத்திய பின்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததால், இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதாகவும் இனிமேலாவது கரைகளை ஆய்வு செய்து கரை சேதமடைந்த இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கரைகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், உடைப்புக்குக் காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிடவும் தமாகா இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.