கோவை அன்னூரில் விஏஓ அலுவலகத்தில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கு மற்றும் கிராம உதவியாளர் காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக, வீடியோ எடுத்த நபர் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி, தனது நிலம் தொடர்பான ஆவணங்களைப் பார்க்கச் சென்ற விவசாயி கோபால்சாமியை, அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கினார். அதன் பின்னர், கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்டார்.
முத்துசாமி காலில் விழுந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சாதிப் பெயரைக் கூறித் திட்டி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறியதாக முத்துசாமி அளித்த புகாரின் பேரில், கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, விஏஓ கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், கோபால்சாமி மீது மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டது. பின்னர், கோபால்சாமியை, முத்துசாமி தாக்கிய வீடியோ வெளியாகி திருப்பத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து விஏஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, கோபால்சாமி அளித்த புகாரின் பேரில், காயப்படுத்துதல் பிரிவில் முத்துசாமி மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த போலீஸார், பின்னர் பிணையில் விடுவித்தனர்.
மேற்கண்ட சம்பவத்தில் முதலில் விவசாயி தாக்கப்பட்ட வீடியோ இருந்தும் அதை வெளியிடாமல், கிராம உதவியாளர் காலில் விழும் வீடியோவை வெளியிட்டு இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வீடியோ எடுத்த நபர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு
இந்நிலையில், அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பெனாசிர் பேகம் அன்னூர் போலீஸில் நேற்று மாலை (ஆக.20) புகார் அளித்தார். அதில், "மேற்கண்ட விவகாரத்தில் முத்துசாமி காலில் விழும் வீடியோவை 7-ம் தேதி வெளியிட்டும், கோபால்சாமி தாக்கப்பட்ட வீடியோவை 14-ம் தேதி வெளியிட்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுத்தி, அசாதாரண நிலையை உருவாக்கிய வீடியோ எடுத்த நபர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டு இருந்தது. அதன் பேரில், அன்னூர் போலீஸார் வீடியோ எடுத்த அடையாளம் தெரியாத நபர் மீது 153 (ஏ) (பி) இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
அன்னூர் போலீஸார் கூறும்போது, "வடக்கு வருவாய் ஆய்வாளர் கொடுத்த புகாரில் வீடியோ எடுத்த நபரின் பெயர் இல்லை. அவர் யார் எனத் தெரியாததால் அடையாளம் தெரியத நபர் எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த நபர் யார் எனத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.