தமிழகத்தில் நெற்பயிரை தவிர்த்து இதர பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக பரப்பளவில் பயிரிடும் பயிராக நெல் உள்ளது. விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற பயிர்க் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகளும், விவசாயிகளும் தங்களின் பங்களிப்பை வழங்கி, காப்பீடு நிறுவனத்தில் பயிர்க் காப்பீடு செய்து, பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து இழப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகள் தலா 49 சதவீதமும், விவசாயிகள் 2 சதவீதமும் காப்பீட்டுக்கான பிரீமியமாக செலுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அரசு தனது பங்களிப்பாக 33 சதவீதம் மட்டுமே வழங்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. அதேநேரத்தில், மாநில அரசு தனது பங்களிப்பான 49 சதவீதத்தைவிட கூடுதலாக 16 சதவீதத்தை ஏற்க முடியாமல் திணறியது. இதுகுறித்து, அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான பயிர்க் காப்பீடு செய்யப்படவில்லை. ஏதேனும் பேரிடர் நிகழ்ந்து, இப்பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகள் மிகுந்த பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, உடனடியாக பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 2021-2022-ம் ஆண்டில் நெல் மற்றும் தட்டைப் பயறு நீங்கலாக மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் ஆக.31-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறியது: நெல்லுக்கு காப்பீடு இல்லை என்ற செய்தி நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தமிழக அரசு இனியும்தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டை அறிவிக்க வேண்டும். அதேநேரத்தில் பல தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் என்றார்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தஞ்சாவூர் மாவட்டதுணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியது: கடந்த 2 மாதங்களாக அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்து, ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே, தமிழக அரசு உடனடியாக நெற்பயிருக்கு காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.