தமிழகம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பருக்குள் கரோனா தடுப்பூசி போட இலக்கு: சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் முதல்முறையாக 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதுவரை அரசு மற்றும் தனியார் இணைந்து 2.7 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் விகிதம் 1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்துக்கு கொண்டு செல்வதற்கும், 1 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் வராமலும், பாதிப்பை குறைக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்கள் வரத்து குறைந்துள்ளது.

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை. அரசு அங்கீகாரம் வழங்கிய தடுப்பூசிகள் மட்டுமே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கோவின் செயலியில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “பள்ளிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT