கொண்டாங்கி ஏரி. 
தமிழகம்

கடலூர் கேப்பர்மலையில் உள்ள கொண்டாங்கி ஏரியை தூர்வாரி படகு குழாம் அமைக்க வேண்டும்: உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு

க.ரமேஷ்

இயற்கை எழில் கொஞ்சும் கடலூர் கொண்டாங்கி ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நகர மக்கள் உள்ளனர்.

கேப்பர் மலையில் உள்ள கொண்டாங்கி ஏரி கடலூர் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. மூன்று பக்கமும் மலையுடன் இயற்கையான சூழலில் 188 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியில் 18.72 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். மழை காலத்தில் ஒருமுறை ஏரி நிரம்பினால், அடுத்த 8 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாது.

இந்த ஏரியின் மூலம் சான்றோர் பாளையம், கடலுார் முதுநகர், சுத்துக்குளம், மணக்குப்பம், வசந்தராயன் பாளையம், புருகீஸ்பேட்டை, மணவெளி, பச்சையாங்குப்பம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கொண்டாங்கி ஏரியில் போடப்பட்டுள்ள10-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் கடலூர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேற்கு பகுதியில் மேல் ஏரியும், கிழக்குப் பகுதியில் கீழ் ஏரியும் என கொண்டாங்கி ஏரி இரு பிரிவுகளாக உள்ளது. மழைக்காலத்தில் மேல் ஏரி நிரம்பி, கீழ் ஏரிக்கு தண்ணீர் வரும். மேல் ஏரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கீழ் ஏரி வறண்டால், மேல் ஏரி தண்ணீர் திறந்து விடப்படும்.

கொண்டாங்கி ஏரியைச் சுற்றி 5 இடங்களில் மதகுகள் உள்ளன. ஏரி தற்போது தூர்ந்து போய் காட்டாமணி உள்ளிட்ட செடி, கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன. சிலர் மேல் ஏரி பகுதியின் மேட்டுப் பகுதியை ஆக்கிரமித்து கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் மேல் ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால், ஆக்கிரமிப்பு பகுதியில் விவசாயம் செய்ய முடியாது. இதற்காகவே மேல் ஏரி ஷட்டரை சிலர் பெயர்த்து தண்ணீரை வடிய வைத்து விடுகின்றனர். கீழ் ஏரி ஷட்டர்களும் தற்போது பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதனால் 8 மாதங்கள் தேங்கி நிற்க வேண்டிய தண்ணீர் மூன்றே மாதத்திற்குள் வற்றி விடுகிறது.

இயற்கை சூழலுடன் அழகாக உள்ள இந்த ஏரியை பொதுப்பணித் துறையினர் சரிவர பராமரிப்பதில்லை. ஏரிக் கரைகளை பலப்படுத்தி மரக்கன்றுகளை நட்டு, நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

கடலுாரில் சில்வர் பீச் மட்டுமே பொழுது போக்கு இடமாக உள்ள நிலையில், இயற்கையான சூழலில் அமைந்துள்ள கொண்டாங்கி ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும் என்று கடலூர் நகர இயற்கை நல விரும்பிகள் கூறுகின்றனர். அப்படிச் செய்தால், நிச்சயம் ஒரு புது மாதிரியான அனுபவத்தை சுற்றுலா பயணிகள் பெற்று மகிழ்வார்கள்.

ஏரியை முறையாக பராமரித்தால் பறவைகளின் வரத்து மேலும் அதிகரிக்கும்.

அது சூழியல் வளர்ச்சிக்கும் உதவும்.

SCROLL FOR NEXT