தூத்துக்குடி பிரையண்ட் நகர்10-வது தெரு பகுதியில் தமிழ்நாடுகாவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 35 வீடுகளைக் கொண்ட இந்த குடியிருப்பில் 3 ஆய்வாளர் வீடுகள், 9 உதவி ஆய்வாளர் வீடுகள், 23 காவலர், தலைமைக் காவலருக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கட்டுமான பணிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து, குடியிருப்பு கட்டிடங்கள் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த வீடுகளை பெற காவல் துறையினர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
பூட்டியே கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இளைஞர்கள் சிலர் அந்த கட்டிடத்தின் மேலே ஏறி செல்பி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவலாளி யாரும் இல்லாததால் கட்டிடம் பராமரிப்பின்றி பாழாகும் அபாயமும் உள்ளது. இந்த குடியிருப்பை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, காவல் துறையினர் மட்டுமின்றி அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
விரைவில் திறப்பு
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “சட்டப்பேரவை தேர்தல் காரணமாக கடந்த ஏப்ரல்,மே மாதங்களில் இந்த குடியிருப்பை திறக்க முடியவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் இந்த குடியிருப்பை திறந்து வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த குடியிருப்பை முதல்வர் திறந்துவைப்பார்” என்றனர்.