தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்கள் அஞ்சல்வழியில் தமிழ் கற்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சுப்பிரமணிய பாரதியார் சிந்தனை மன்றத்தின் செயலர் ஆர்.லெட்சுமிநாராயணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
இந்தியாவில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை சார் பில் இந்தி மொழியை தாய்மொழி யாகக் கொள்ளாத அனைத்து இந்தியர்கள், வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல்வழி கல்வி மூலம் ரூ.50 முதல் ரூ.200 கட்டணத்தில் இந்தி கற்பிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதேபோல், தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், பிற மாநிலத்த வர்களும் தஞ்சாவூர் தமிழ் பல் கலைக்கழகம் மூலம் அஞ்சல்வழி தொடர் கல்வி மூலம் தமிழைக் கற்பிக்க வசதி செய்ய வேண்டும் என தமிழ அரசுக்கு 16.3.2013-ல் மனு அனுப்பினோம்.
இதையடுத்து தமிழ் அஞ்சல் வழி கல்வி அளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்ய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆய்வு நடத்தப்பட்டு, ‘தமிழ் மொழியை இந்தியா முழுவதும் கற்பிக்க ஆண்டுக்கு உத்தேசமாக ரூ.37,36,300 செல வாகும். இந்த தொகையில் 6 மாத சான்றிதழ் படிப்பிலும், ஓராண்டு பட்டயப் படிப்பிலும் முதலாம் ஆண்டில் ஆயிரம் மாணவர்களை சேர்த்து தமிழ் கற்றுக் கொடுக்க முடியும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநருக்கு பல்கலைக்கழக பதிவாளர் 19.5.2014-ல் கருத்துரு அனுப்பினார்.
இந்த கருத்துருவை ஏற்று அஞ்சல்வழி தமிழ் கற்பித்தலுக்காக உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ் வளர்ச்சித்துறை துணைச் செயலருக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் 15.9.2015-ல் அனுப்பிய கடிதத்தில், தமிழை தாய்மொழியாக கொண் டிராதவர்களுக்கு அஞ்சல்வழியில் தமிழை கற்பிக்கும் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இத்திட்டத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. எனவே தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் அஞ்சல் வழியில் தமிழ் கற்பிக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அனந்தபத்மநாபன் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மூலம் அஞ்சல் வழியில் தமிழ் கற்பதற்காக தேவையான நிதி ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.