வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்புக்கும், பதிவேட்டில் உள்ளதற்கும் வித்தியாசம் வருகிறது என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இன்று (ஆக. 20) அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தபின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கப்பட்டதில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் வருகிறது. இது வருத்தமான செய்தி.
இந்த சரிபார்க்கக்கூடிய பணிகளை இயக்குநர் (உற்பத்தி), இயக்குநர் (விநியோகம்) உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுக்கள் மேற்கொண்டன. கடந்த 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.
இது முதல்கட்ட ஆய்வு. தொடர்ந்து இன்னும் அந்தக் குழுக்கள் முழுவதுமாக ஆய்வு செய்து, என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்கின்றன, எப்படி இந்த வித்தியாசம் வருகிறது, இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என முழுவதும் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது, 31-03,2021 வரை பதிவேட்டில் உள்ள கணக்கீட்டின் அடிப்படையிலான வித்தியாசம். ஒரு நிர்வாகத்தில் இருப்பும், பதிவேட்டில் உள்ளதும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என்பது ஆய்வின் முடிவில் தெரியவரும். இதன் மதிப்பு ரூ.85 கோடி.
தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் உண்மை நிலை தெரியவரும்".
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.