அரசியல் ஆதாயத்துக்காக தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ந்ததுபோன்ற மாயத் தோற்றத்தை திமுக அரசு உருவாக்கி உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-12 முதல் 2018-19 வரை நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. 2019-20-ல் நிதிப் பற்றாக்குறை 3.26 சதவீதமாக இருந்தது.
ஆனால், 2016-17-க்குப் பிறகு நிதிநிலையில் பெரியசரிவு ஏற்பட்டதாகவும், அரசின் திறமையின்மையே அதற்கு காரணம் என்பதுபோலவும், உண்மைக்கு மாறான தோற்றத்தை வெள்ளை அறிக்கை மூலம் மக்களிடம்பதியவைக்க முயற்சிக்கின்றனர்.
2020-21ல் சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் சரிந்துள்ளது. கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இது ஓர் அசாதாரண சூழ்நிலை. எனவே, இதை வைத்து நிதி நிலைமையை கணிப்பதும், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை உயர்ந்துவிட்டது என அச்சத்தை ஏற்படுத்துவதும் பொருத்தமாக இருக்காது.
திமுக அரசின் திருத்திய பட்ஜெட்டிலும், கரோனாவைக் காரணம் காட்டி, வரி வருவாய், வருவாய் வரவு ஆகியவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கடன் இரட்டிப்பாவது சாதாரணமானதே. திமுக ஆட்சியிலும் அப்படித்தான் ஏற்பட்டது. ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக, இதை குடும்பக் கடனாக கணக்கிட்டு, இல்லாத பிரச்சினையை பூதாகரமாக்கி, மக்களை அச்சுறுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டிலேயே தமிழகம் போல,அதிக செலவில், அதிக மக்கள்பயன்பெறும் நலத் திட்டங்கள் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை. குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிராபோல தமிழகத்திலும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருந்தால், வருவாய் உபரி, நிதி உபரி மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும்.
அரசியல் செய்வதற்காக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றஇயலாது என்பதை மக்களிடம் தெரிவிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக, இதுபோன்ற வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, பொருளாதாரத்தில் தமிழகம் வீழ்ச்சி அடைந்துவிட்டது போன்றும், கடன் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது போலவும் மாயத் தோற்றத்தை திமுக அரசு உருவாக்கி உள்ளது.
புதிய அரசின் முதல் பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, வேளாண்மேம்பாடு, கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு, நிதி மேலாண்மை போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய தொலைநோக்குப் பார்வை இல்லாதது வருந்தத்தக்கது. வறுமையை ஒழிக்கும் அணுகுமுறை, வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள், சுற்றுலா மேம்பாடு என புதிய உத்தியோ, அணுகுமுறையோ இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்