கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை உதகையிலுள்ள மாவட்டநீதிமன்றத்தில் ஆக.27-ல் போலீஸார் தாக்கல் செய்ய உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் 2017 ஏப்.23-ல் ஒரு கும்பல் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.
பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். 10 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இவ்வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இவ்வழக்குக்காக ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய இருவர் அரசின் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்கள், கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்தனர். இதையடுத்து, மீண்டும் சயானிடம் விசாரணை நடத்த கோத்தகிரி போலீஸார் சம்மன் அனுப்பினர். அவர்கள் முன்பு சயான் கடந்த 17-ம் தேதி நேரில் ஆஜரானார்.
உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயானிடம் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், குன்னூர் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். வரும் 27-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, சயானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்யஉள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சயான் தெரிவித்த தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிலையில், மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளதால் இவ்வழக்கில் திருப்பம் ஏற்பட்டுஉள்ளது.