காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வீடு கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வீடுகளை உண்மையில் வீடற்றோருக்கும், நிர்நிலைகளின் ஓரம் குடிசை போட்டு வாழும் ஏழை மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி ஆற்றில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் அளவீடு செய்ததில் 1,418 வீடுகள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஆற்றில் வீடு கட்டி வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மொத்தம் 2,112 வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன. வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களில் விண்ணப்பித்த 1,406 பேருக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 706 குடியிருப்புகள் மீதமுள்ளன. இதற்கு வீடு, நிலம் இல்லாத ஏழை மக்கள் மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகளின் பரிந்துரையின் அடிப்படையில் வீடுகளைப் பெறலாம் என்று நிலம்,வீடு வைத்துள்ளவர்கள் பலர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். ஏற்கெனவே வீடுள்ளபலர் இந்த வீடுகளை வாங்கி மறு விற்பனை செய்யவும், வாடகைக்கு விடும் நோக்கத்திலும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பலர் மனுக்களை அளித்து வருகின்றனர்.
ஒருபுறம் இதுபோல் பலர் வீடு கேட்டு மனு அளிக்கும் நிலையில் மறுபுறம் ஏழ்மை நிலையில் வாழும் மக்களில் பலர் மனு அளிக்கக் கூட திக்கற்ற நிலையில் உள்ளனர். வீடு கேட்டு விண்ணப்பித்தால் பயனாளிகளின் பங்குத் தொகையாக ரூ.1.5 லட்சம் பணம் செலுத்த வேண்டி இருப்பதால், உண்மையில் வறுமையில் வாடும்மக்கள் பலர் விண்ணப்பம் அளிக்கக் கூட வரவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் பங்குத் தொகையை செலுத்த முன்வர வேண்டும். உண்மையில் வறுமையில் வாடும் மக்களை கணக்கெடுத்து இந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் கட்சியினர் தலையிட அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.