சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அவசர காலத்தில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ வசதி அளிக்க முதல் உதவி மருத்துவ மையம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலந்தூர் கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில்சேவை சென்னையில் ஏற்பட்ட கனமழைக்கு பிறகு கணிசமாக கூட்டம் அதிகரித்துள்ளது. அதாவது, ஏற்கெனவே தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மெட்ரோ ரயில் கட்டணம் கணிசமாக குறைத்தால், பயணிகளின் எண்ணிக்கை மேலும், பல மடங்கு அதிகரிக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் எக்ஸ்லேட்டர், லிப்ட் வசதி மற்றும் மெட்ரோ ரயிலில் ஏசி வசதி, தீயணைப்பு கருவிகள், தானியங்கி கதவுகள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, வைபை வசதி, ரயில் நிலையங்களின் கூரைகளில் சோலார் தகடுகள் அமைத்து மின்உற்பத்தி செய்தல் உள்ளிட்ட புதிய திட்டங்களையும் படிப்படியாக செயல்படுத்திட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, அவசர காலத்தில் பயணிகளுக்கு முதல் மருத்துவ உதவிகளை பெறும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் அவசரகால மருத்துவ மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகளை ஈர்க்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு, சுற்றுலா கார்டு திட்டங்களும் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி வருகிறோம். சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு பிறகு மெட்ரோ ரயில்களில் கணிசமாக மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும், எழும்பூர், பரங்கிமலை ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவை இணையும் போது, பயணிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும்.
முதியோர்கள், குழந்தைகள் உட்பட அனைத்துதரப்பு பயணிகளும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்படும் போது, அவசர காலத்தில் முதல்உதவி பெறும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மையங்கள் திறக்கப்படும். இதற்கான தேவை தற்போது குறைவாக இருக்கிறது. எனவே, மக்கள் கூட்டம் மேலும், அதிகரிக்கும்போது இந்த சேவை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.’’ என்றனர்.