புதிய தமிழகம் கட்சி, தேனி மாவட்ட நிர்வாகிகளுடனான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அல்லிநகரத்தில் நேற்று நடை பெற்றது.
இதில் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி செய்தியாளர் களிடம் கூறியது: தேர்தல் தேதி அறிவித்த பின்னரே, புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து அறிவிக்கும். நாங்கள் கூட்டணி வைக்கும் அணியே, இதுவரை வெற்றி பெற்றுள்ளது. இனியும் வெற்றிபெறும்.
வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கி, வாக்குகளை பெறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. கல்வி, வேலைவாய்ப்பு தொழிலில் தென்தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கு தற்போது நிலவி வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. ஆனால், தூத்துக்குடி மாவட் டத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. நான் நீதிமன்றம் சென்று முறையிட்டதால், ஓரளவு நிவாரண உதவி கிடைத்தது. அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரில், வெள்ள நிவாரணம் குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து பேச அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்றார்.
பேட்டியின்போது, புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயபால்பாண்டியன் உடன் இருந்தார்.