மத்திய அரசின் நிதியமைச்சரும், பிரதமரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பதிலுரையை இன்று (ஆக. 19) சட்டப்பேரவையில் ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"தமிழக அரசு பெட்ரோல் விலையைக் குறைத்ததனால், பெட்ரோலின் விற்பனை ஒரு நாளைக்கு சுமார் 12% அதிகரித்திருக்கிறது. நாம்தான் வரியைக் குறைத்திருக்கிறோம். ஆனால், மத்திய அரசு வரியைக் குறைக்கவில்லை. அதனடிப்படையில், ஒரு நாளைக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்திருக்கிறது.
இந்த நிலைமை நீடிக்குமா என்று தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால், இந்த விற்பனை விகித மாற்றத்தினால் மத்திய அரசுக்குக் கூடுதல் வருமானமாக ஒரு நாளைக்கு ரூ.3.55 கோடி வரும் என்ற ஒரு புள்ளிவிவரத்தைத் தெரிவிக்கிறேன்.
அப்படியென்றால், இந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், முதல்வர் எடுத்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம் வரும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மத்திய அரசின் நிதியமைச்சரும் பிரதமரும் தமிழக முதல்வருக்கு இதற்காக நன்றி தெரிவித்தால் முறையாக இருக்கும்".
இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.