தமிழகத்தில் முதல் முறையாக விளாத்திக்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.42 லட்சத்தில் 22 ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறை அமைக்கப்பட்டது.
விளாத்திக்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏகம் பவுண்டேசன் சமூகப் பொறுப்பு நிதி ரூ.38 லட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.4.09 லட்சம் செலவில் பிராணவாயுக் கூடம், 60 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 22 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 60 படுக்கைகளுக்கான உறிஞ்சு குழாய், பாதுகாப்பு அலாரம் ஆகியவை ஒவ்வொரு தளத்திலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு சிலிண்டரும் 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
மேலும், ஏகம் பவுண்டேசன் சார்பில் ரிமோட் கன்ட்ரோலுடன் கூடிய 6 தீவிர சிகிச்சை கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு, அரசு மருத்துவமனைக்கு 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, அவர் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியர் சங்கர நாரயணன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் முருகவேல், விளாத்திகுளம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மு.மகாலெட்சுமி, சித்த மருத்துவர் மா.தமிழ் அமுதன், குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.எஸ்.திவ்யா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.