மத்திய அரசின் திட்டத்தைத் தமது திட்டம் போல மக்கள் மத்தியில் காட்ட முயல்வதாக, காரைக்கால் தெற்குத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் மீது காரைக்கால் நகர காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.துரை சேனாதிபதி, நகர காவல் நிலையத்தில் இன்று(ஆக.19) அளித்த புகார் மனுவில், “மத்திய அரசின், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் இடம் பெற்ற விளம்பர பேனரில் பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.
மாறாக சட்டப் பேரவை உறுப்பினர் நாஜிமின் புகைப்படத்தை மட்டும் இடம்பெறச் செய்து, மத்திய அரசின் திட்டத்தைத் தமது திட்டம் போல மக்கள் மத்தியில் காண்பித்து பெருமை தேட முயன்றுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்து, அரசு ஊழியர்களைத் தவறாகப் பயன்படுத்தி அவர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். அதனால் நாஜிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் எம்.அருள்முருகன், இளைஞரணிப் பொதுச் செயலாளர் கணேஷ், மாவட்டப் பொதுச் செயலாளர் அப்பு (எ) மணிகண்டன், சிறுபான்மை அணி மாநிலச் செயலாளர் அப்துல் பாசித் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்போது உடனிருந்தனர்.
மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.