செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர். 
தமிழகம்

 ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல்; திமுகவின் குறிக்கோள்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான் திமுகவின் குறிக்கோள் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, நேற்று (ஆக. 18) பேரவையில் எதிரொலித்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல நடந்து கொள்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக, ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும், நேற்றும் இன்றும் (ஆக. 19) சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.

இந்நிலையில், இன்று சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு ஒன்றை ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழங்கினர்.

இதன்பின், ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள், தங்களது பாக்கெட்டுகளை நிரப்புவதிலேயே மும்முரமாக உள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல், அதனை மறைக்க திமுக அரசு அதிமுக தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்நுட்ப நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை போடுகின்றனர்.

ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் ஆகியவைதான் திமுகவின் குறிக்கோள். கரப்ஷன், கலெக்‌ஷன், வென்டேட்டா இதைத்தான் திமுக அரசு செய்து வருகிறது. வசூலிப்பதே திமுக அரசின் 100 நாள் சாதனை. அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணியிட மாற்றம் செய்ததுதான் அவர்களின் 100 நாள் சாதனை. 100 நாட்களில் மக்கள் வேதனையும் சோதனையையும்தான் பெரும்பாலும் அடைந்திருக்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை திமுக அரசு முடக்கி வைத்திருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன்மூலம், ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அந்த திட்டத்தையும் முடக்கி வைத்துள்ளனர்.

ஏற்கெனவே முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அந்த திட்டங்களை முடக்கி வைத்து, தாங்கள்தான் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதில்தான் திமுக அரசு சாதனை படைத்துள்ளது.

முன்பு திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, பதவி வகித்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வேக வேகமாக முடிப்பதற்கு திமுக அரசு ஈடுபட்டுள்ளது. அதனை மறைப்பதற்காக அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மீதும் வழக்குகளை, சோதனை என்ற பெயரில் தொடுத்துள்ளனர். வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது கோடநாடு இல்லத்துக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அவர் மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் சில கொள்ளை கும்பல், சயான் மற்றும் அவரின் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அங்கிருந்த காவலாளி தடுத்தார். அப்போது, தாக்குதலுக்குட்பட்டு அவர் இறந்தார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. வழக்கு முடியும் தருவாயில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக அரசு நடத்துகிறது.

கேட்டால், தேர்தல் அறிக்கையில் இருக்கிறது என்கிறார். தேர்தல் அறிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. முறையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதிமன்ற விசாரணையை இதனுடன் ஒப்பிடக்கூடாது.

டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருந்தபோது, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 முறை மாறுபட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கினர்.

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு எதற்காக திமுக இவ்வளவு ஆதரவாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆஜராகியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகினர்.

குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் அரசு இருக்க வேண்டுமே தவிர, ஆதரவாக இருக்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவதாக ஐயம் இருக்கிறது. சயான் அளித்த வாக்குமூலத்தில் என்னையும் முக்கிய நிர்வாகிகளையும் சேர்த்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. நீதிமன்ற அனுமதி பெறாமல் விசாரித்துள்ளனர். இந்த வழக்கை திசைத்திருப்ப முயற்சிக்கிறார்கள்.

வெள்ளை அறிக்கை என வெற்று அறிக்கையை வெளியிட்டனர். அது மக்களிடம் எடுபடவில்லை. நீட் தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு மழுப்பலான பதிலளித்தனர். ஆனால், தேர்தல் அறிக்கையில் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து செய்வதுதான் என்றனர்.

'நமது அம்மா' பத்திரிகை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பத்திரிகை சுதந்திரம் பேணி காக்கப்படும் என்றனர். ஆனால், இங்கு சோதனை என்ற பெயரில் நுழைந்து பணி செய்யவிடாமல் தடுத்து மறுநாள் நாளிதழை வரவிடாமல் தடுத்தனர்.

மூன்றாவது அலை குறித்த மக்களின் அச்சத்தை பொருட்படுத்தவில்லை.நாங்கள் அப்படியல்ல, கரோனாவைக் கட்டுப்படுத்தினோம். தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதை குறைத்துக் காண்பிக்கின்றனர். முறையாக சிகிச்சை அளிப்பதில்லை. இணை நோய் தாக்கப்படதால் இறந்ததாக இறப்பு சான்றிதழ் அளிக்கின்றனர்".

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT