தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, நேற்று (ஆக. 18) பேரவையில் எதிரொலித்தது.
இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக, ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும், நேற்றும் இன்றும் (ஆக. 19) சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.
இந்நிலையில், இன்று சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு ஒன்றை ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழங்கினர்.