நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த கேபிரியேல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேறு வழக்குகளும் இவர் மீது பதிவாகி உள்ள நிலையில், சிறையில் இருந்தபடி போனில் மிரட்டல் விடுத்து, தனது ஆட்கள் மூலம் தொழிலதிபர்கள் சிலரிடம் பணம் வசூலிப்பதாகவும் இதனால், மயிலாடுதுறை பகுதியில் வசிக்கும் முக்கியப் பிரமுகர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
ஆனால், இதுபோன்ற மிரட்டல் எதையும் தான் விடுக்கவில்லை என்று கேபிரியேல் தற்போது தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து அவர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், ‘சுரேஷ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் எனக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ரூ.10 லட்சம் கேட்டு சுரேஷை மிரட்டியதாகவும், பணம் தராததால் அவரை கொலை செய்ததாகவும் என் மீதும் தலித் இளைஞர்கள் மீதும் போலீஸார் போட்ட பொய் வழக்கு இது. இந்த வழக்கில் உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன்.
2006-ல் என் மீது போடப்பட்ட ஆள் கடத்தல் வழக்கை விசாரித்த புதுக்கோட்டை விரைவு நீதிமன்றம், அதிலிருந்து என்னை விடுதலை செய்தது. மேலும், எந்த சட்டமன்ற உறுப்பினரையும் நான் மிரட்டவில்லை. என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் காவல் துறையினரால் பொய்யாக போடப்பட்டவை’ என தெரிவித்துள்ளார்.