சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் உருவாகும் ‘நிழல் இல்லாத நாள்’ என்ற வானியல் அபூர்வ நிகழ்வு சென்னை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று தென்பட்டது.
சூரியக் கதிர்கள் செங்குத்தாக, நிற்கும் பொருட்கள் மீது விழும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. அதாவது நிழல் பொருளின்அடியிலேயே விழுந்து விடுவதால் நமது கண்களுக்கு அவை தென்படாது. உதாரணமாக குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும்போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை‘நிழல் இல்லாத நாள்’ என்று குறிப் பிடுகின்றனர்.
இந்த வானியல் அபூர்வ நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் தென்படுவதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். இது சூரியனின் வடநகர்வு மற்றும் தென் நகர்வைப் பொறுத்து ஆண்டுக்கு 2 முறை வரும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான 2-வது ‘நிழல் இல்லாத நாள்’ சென்னை, வேலூர் உட்பட பல இடங்களில் நேற்று தென்பட்டது. ‘அறிவியல் பலகை’ அமைப்பு சார்பில் சென்னையில் ‘நிழல் இல்லாத நாள்’ குறித்த நேரடி விளக்க நிகழ்வுகோட்டூர்புரத்தில் உள்ள பிர்லாகோளரங்கத்தில் நேற்று நடந்து.
அதன்படி மதியம் 12.13 மணிக்குசூரியன் நேர் உச்சிக்கு வந்தபோதுசில விநாடிகள் நிழல் இல்லாத காட்சி தென்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:
சூரியனின் கதிர்கள் புவியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவதால் ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ ஏற்படுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும்.
இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும், சூரியனின் உயரத்தையும் கணக்கிடலாம். தொடர்ந்து மாமல்லபுரம், புதுச்சேரி என பிறபகுதிகளிலும் வரும் நாட்களில் ‘நிழல் இல்லாத நாள்’ நிகழ்வு அரங்கேறும். இந்த நிகழ்வு செப்டம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு பெறும்.
செயலி மூலம் அறியலாம்
அதன் விவரங்களை அறிய ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ (Zero Shadow Day-ZSD) என்ற செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதிலுள்ள தேடல் வசதி (ZSD Finder) மூலம் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தை குறிப்பிட்டால் அங்கு ‘நிழல் இல்லாத நாள்’ எந்த தேதிகளில் ஏற்படும் என்பதை அறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் அறிவியல் அலுவலர் இ.கி.லெனின்தமிழ் கோவன், தொழில்நுட்ப அலுவலர் அ.பாலகிருஷ்ணன், ‘அறிவியல் பலகை’ ஒருங்கிணைப்பாளர் பா.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.