தமிழகத்தில் வரும் 21, 22-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகதமிழகத்தில் 19-ம் தேதி நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 20-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
21, 22-ம் தேதிகளில் வடதமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9 செமீ, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 8 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.